விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்... சிவகாஞ்சியில் இறைச்சி, பிரியாணி கடைகளை மூட உத்தரவு...
காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு, செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் இறைச்சி, பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இம்மாதம் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கும், ஊர்வலத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடை விலக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி நிலையம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட செயல்முறை ஆணை என்ற பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த உத்தரவில், ‘‘காஞ்சீபுரம் மாவட்டம் பி ஒன் சிவகாஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி தினமான வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
மேலும் அதற்கடுத்து செப்டம்பர் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. எனவே செங்கழுநீரோடை மற்றும் சங்கர மடம் அருகில் இயங்கி வரும் இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணிகளை கடைகளை இந்த குறிப்பிட்ட நாட்களில் மூட வேண்டும். விழா கொண்டாட்டங்களில் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இறைச்சி மற்றும் பிரியாணி கடைகளை மூடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்

