தற்காலிக ஆசிரியர் நியமனம் நிறுத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் 13,331 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு பள்ளிகல்விதுறை உத்தரவு பிறப்பித்திருந்தது
அதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று சென்னை DPI வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.
மேலும்தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அவர்கள் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என குறிப்பிட்டார்.அதைத்தொடர்ந்து அரசு தரப்பில், விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்