Breaking News

கொரோனா முடிவுக்கு வந்த பின்பு சி.ஏ.ஏ. அமல் - அமித்ஷா திட்டவட்டம்

அட்மின் மீடியா
0

கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக குறைந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.


மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார் அப்போது பேசிய அவர்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அவதூறுகளை பரப்பி வருகிறது.  நான் இப்போதும் சொல்கிறேன் கொரோனா அலைகள் ஓய்ந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவோம் என திட்டவட்டமாக கூறினார்

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்க்கு  இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

பல மாநிலங்களில் இந்த சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டடது

இதைத் தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது பா.ஜ.க தலைவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்து வந்தனர்.


குடியுரிமை சட்டதிருத்த மசோதா என்றால் என்ன? 

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். 

ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும்,  இந்த சட்டத் திருத்தம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது. 

1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம்தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும். 

இந்த பழைய சட்டத்தின் படி இந்தியாவில் பிறந்தவர்களும் இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும். முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. 

ஆனால் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த திருத்தம். முன்பெல்லாம் முறையின்றி இந்தியாவில் குடியேறினால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். ஆனால் புதிய சட்டப்படி அரசு அவர்களை கைது செய்யாது அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும். 

மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.  ஆனால் இதில் இஸ்லாமியர்களை சேர்க்கவில்லை

மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள். இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள்

உதாரணமாக 2013 ல் ஒரு இந்துவும் இஸ்லாமியரும் வங்கதேசத்தில்  இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருந்தால் அதில் இந்துவுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும். மாறாக இஸ்லாமியர் சிறைக்கு செல்வார் அல்லது நாட்டை விட்டு செல்வார். இதுதான் இந்த மசோதாவை எதிர்க்கப்பட காரணம்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback