ஆம்பூரில் நாளை தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஆம்பூர் பிரியாணி திருவிழா வருகிற 13,14,15 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கான பணிகள் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது, இதற்காக 30 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 22 வகையான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.அதேசமயம் பிரியாணி திருவிழாவிற்க்கு வருகை தரும் மக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என்பது உணவு பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாக தருவோம் என்று எஸ்டிபிஐ, விசிக, மமக கட்சிகள் அறிவித்துள்ளன. விழா வளாகம் முன் பீப் பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்பூரில் நாளை தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்