கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கர்நாடாக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதனை மீறி ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்பறைகளுக்குள் அனுமதித்தால், நாங்களும் காவித்துணி அணிந்து வருவோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் தடைக்கு எதிராக கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்
இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹிஜாப் விவகாரம் இந்த மோசமான நிலையை அடைவதற்கு மாநில அரசின் மோசமான நிலைபாடு தான் என குற்றம் சாட்டினார்.
ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என நீதிபதி கிருஷ்ணா தீட்சித் தெரிவித்திருக்கிறார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தவிட்டார். அதனை தொடர்ந்து 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு பிப்ரவரி 10-ம் தேதி முதல் தினமும் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் எந்தவிதமான மத உடைகளையும் அணியாமல் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) தனது தீர்ப்பை வழங்க இருக்கிறது.தொடர்ந்து 11 நாள்களாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஹிஜாப் விவகார வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி நீதிபதிகள் காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்