2 மாடிக்கு மேல் கட்டடம் அமைத்தால் 'லிஃப்ட் கட்டாயம்' மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
2 அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை கருத்தில்கொண்டு பேருந்து வசதி, நிவாரணம் போன்றவை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சமீபத்தில் மாற்றுத் திறனாளிகள் இல்லங்களில் போதிய வசதிகள் இல்லாமல் கட்டப்படுவது குறித்த சர்ச்சையும் எழுந்தது.
இதனால் இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகளுடன் இல்லங்கள் அமைக்கப்படவேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இனிமேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் இரண்டு அடுக்குக்கு மேல் இருந்தால் கட்டாயம் லிஃப்ட் வசதி இருக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்யப்பட வேண்டும்.
2 அடுக்குகளுக்கு மேலான கட்டடங்களில் சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்