இஸ்லாமிய மக்களுக்கு ஜமா அத்துல் உலமா சபையின் வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06.04.2021 அன்று நம்முடைய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்திற்கு ஒரு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுத்து தருவதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்வதும், வரிசையில் காத்திருப்பதும், பொறுமையாக சிந்தித்து வாக்களிப்பதும் இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் நன்மையான காரியம் மட்டுமல்ல அவசியம் நிறைவேற்ற வேண்டிய கடமையும் ஆகும்.
வாக்களிக்காமல் அலட்சியமாக இருப்பது கடமை தவறிய செயலாகும். எனவே நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்
இன்றைய சூழலில், நாட்டின் ஜனநாயக அமைப்பையும் பன்முகக் கலாச்சாரத்தையும் சீரழித்து சிறுபான்மையின மக்களின் மத நம்பிக்கைகளை கேள்விக்குறியாக்கி, அவர்களது உரிமைகளைப் பறித்து, சாமானிய மக்களின் நலனில் சிறிதும் அக்கறை காட்டாமல் கார்ப்பரேட்டுக்களின் காவலனாக இருக்கிற மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, மறைமுக மிரட்டல்கள் மற்றும் சதிகளின் மூலம் சுயமரியாதையின் பூமியான நமது தமிழகத்தில் காலூன்றி விடுவதற்கு கடுமையாக முயற்சி செய்துவருகிறது.
எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் ஃபாஸிச பாஜக கூட்டணியை முழுமையாகத் தோற்கடிப்பதே நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்
ஆகவே, தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்ட வாக்காளர்கள் அனைவரும் 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது,
மற்ற கூட்டணிகள் மற்றும் உதிரிக் கட்சிகளை ஆதரிப்பது மக்கள் விரோத சக்திகளுக்கு சாதகமாகிவிடும் என்றும் எச்சரிக்கிறது
அதே நேரத்தில் ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிடவும் வாக்கு கேட்டு வரவும் அனைவருக்கும் உரிமை உண்டு. நமது விருப்பத்தையும் அதிருப்தியையும் வாக்குச்சீட்டில் வெளிப்படுத்துவதே சரியான வழிமுறையாகும்.
எனவே வாக்கு கேட்டு பள்ளிவாசலுக்கு அல்லது முஸ்லிம் மஹல்லாக்களுக்கு யார் வருகை தந்தாலும் அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது
Tags: மார்க்க செய்தி