Breaking News

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு ,மாவட்ட எல்லைகள் மூடல்: முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில்  நாளை 24.03.2020 முதல் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு


கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் நாளை 24.03.2020 மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று (23.3.2020) சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்துதல் குறித்து அளித்த விளக்கத்தில்.. கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

என்றும் மேற்கொண்டு வைரஸ் பரவாமல் இருக்க தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம், 1897ல் ஷரத்து 2 ன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது என்று அறிவித்தார் 

மேலும் இந்த உத்தரவின்படி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று கூறினார்:-


  • அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
  • அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர  மற்ற அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.
  • அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
  • தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
  • அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  • அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.
  • வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்
  • தடை உத்தரவால், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து, அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை
  • நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

  • கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க இந்த அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback