Breaking News

மாவீரன் மருதநாயகம் ! மண்டியிடாத வீர வரலாறு

அட்மின் மீடியா
0
வீரம் விளைந்த தமிழ் மண்ணில் மாவீரர்கள் துரோகத்தால் வீழ்வதை நினைவூட்டும் வரலாறு மருதநாயகத்தின் வரலாறு. 

தமிழ்நாட்டின் பண்டைய இராமநாதபுரம் மாவட்டத்தையும் இன்றைய சிவகங்கை அருகில் உள்ள  பனையூர் பிறந்தவர், மருதநாயகம் . அந்நாளில் பனையூர் கிராமத்தில் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின. மருத நாயகத்தின் குடும்பமும் அவற்றில் ஒன்று. இஸ்லாத்தைத் தழுவிய பின் மருத நாயகம், இஸ்லாமிய முறையில்  யூசுப்கான் என்று பெயர் சூட்ட்டபட்டார். தன் இளமைக்காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் படையில் வேலைபார்க்கும் போது தமிழ், பிரெஞ்சு ,போர்த்துக்கீசியம், ஆங்கிலம் , உருது ஆகிய மொழிகளைக் கற்று தேர்ந்தார்.

1750 -களில் ஆங்கிலேயருக்கும் ,பிரெஞ்சுக்காரர்களுக்கும் நாடுபிடிக்கும் போர் நடந்தபோது, யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமைக் கண்டு வியந்த இராபர்ட் கிளைவ், தனது படையுடன் அவனை இணைத்தார். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார்.





1752இல் கான்ட் கிளைவின் ஆற்காடு முற்றுகையின் போது கிளைவ் பெற்ற மகத்தான வெற்றிக்கு யூசுப்கான் முக்கிய காரணமாக இருந்தார். பிரஞ்சுக்காரர்களுடன் நடந்த பல்வேறு போர்களில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு யூசுப்கானின் பங்கு மகத்தானது. அதனால் ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் யூசுப்கானை சிப்பாய் படைகளுக்குத் தளபதி ஆக்கி கான் சாஹிப் எனும் பட்டமும் தங்கப் பதக்கம் பரிசும் வழங்கினார். அது முதல் அவர் 'கமாண்டோ கான் சாஹிப்' என அழைக்கப்பட்டார் .



1757இல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார்.


1758-ல் ஆங்கிலேயருக்கெதிராக சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுபடைகளை எதிர்கொள்ள ஆங்கிலேய அரசு யூசுப்கானின் உதவியை நாடியது, யூசுப்கானும் சென்னை சென்று கொரில்லா தாக்குதல் நடத்தி பிரெஞ்ச் படைகளை தோற்கடித்தார்.


இதனால் 'கமாண்டோகான்' எனும் பதவி உயர்வு பெற்றார். தென்னகத்தில் சிறந்தமுறையில் நல்ல முறையில் ஆட்சி செய்த யூசுப்கானுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.  மதுரையில் கொடிகட்டிப் பறந்தது அவரது புகழ்! இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் திருச்சி பகுதியில் இனி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்தார் ஆற்காடு நவாப்! இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை! பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே..போனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்று பிரச்சனையை முடித்தனர்

அதன்பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபா? மருதநாயகமா? யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? யாருக்கு பணிவது? என முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆங்கிலேயர்களுக்கு வந்தது. ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு நவாபுக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

அது தங்கள் நிம்மதிக்கு கேடாக வந்த முடிவு என்பது அப்போது தெரியவில்லை! வசூலித்த கப்பத்தை ஆற்காடு நாவாபிடம்தான் ஒப்படைக்க வேண்டும்  ஆற்காட்டு நவாப்பின் பணியாளர்தான் 'மருதநாயகம்'  என ஆணை பிறப்பித்தது. இதனால் நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் மேல் மிகுந்த மனக்கசப்படைந்தார் மருதநாயகம்.


முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். இந்நிலையில் மருதநாயகம் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வைத்தூண்டுவதாக குற்றம் சாட்டி ,அவரை கைது செய்ய உத்தரவிட்டது




1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றி கோட்டையில் பறக்கவிட்டார்! மருதநாயகம்,  தன்னை 'சுதந்திர ஆட்சியாளன் 'எனப்பிரகடனப்படுத்திக்கொண்டு,  27,000 வீரர்களை வைத்து படையை  பலப்படுத்தினார். இது அக்காலத்தில் திரட்டப்பட்ட  மிகப்பிரமாண்டமான படை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார்.


ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன. 1764 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’!

மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!

நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.


“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு மைசூர் ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)

பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு  பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.



கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் மைசூர் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். 




உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. 

அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.


போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். மருதநாயகத்தின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.

மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.


மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.

700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது



மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.


15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்! அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.

தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!

புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.

இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது!  தூக்கிலிடப்பட்டபின்னரும், உயிர்த்தெழுந்து வந்துவிடுவான் என நம்பிய ஆங்கிலேய அரசு, அவரது உடலை பல பாகங்களாக வெட்டி, பல்வேறு இடங்களில் புதைத்தது.


அவ்வாறு வெட்டப்பட்ட தலையை திருச்சியிலும், கைகளை நெல்லை பாளையங்கோட்டையிலும்,  கால்களை தேனி மாவட்டம் பெரியகுளத்திலும், உடலினை மதுரை -சம்மட்டிபுரத்திலும் அடக்கம் செய்தது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நினைவுகூரப்படும் நாள் வரை மருதநாயகம் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பார்.



மருத நாயகம் பெயர் சொல்லும் நினைவிடங்கள்

  • திருவில்லிப்புத்தூர் வத்திராயிருப்பு அருகே முகமதுகான்சாகிப்புரம் என்று அழைக்கப்பட்ட ஊரே தற்போது கான்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.
  • நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறம் ஒரு பெரிய மேடு இருக்கிறது. இப்போது அந்த இடத்தை 'கான்சாமேடு' என்று அழைத்து வருகின்றனர்.
  • முகமது யூசுப்கான் மக்களால் கான்சாகிப் என்று அழைக்கப்பட்டார். மதுரையில் சில தெருக்கள் அவரது பெயரால் அமைந்தன.
  •  மதுரை தெற்கு மாசி வீதிக்கும், தெற்கு வெளி வீதிக்கும் இடையில் உள்ள கான்சா மேட்டுத்தெரு இவரின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது. மதுரை கீழவெளி வீதிக்கும் இராமநாதபுரம் சாலைக்கும் மூன்று சாலைக்கும் இடையில் உள்ள இடம் இவர் பெயரால் 'கான்பாளையம்' என்றழைக்கப்படுகிறது.
  • வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட இடம் இவர் பெயரால் 'கான்சாகிப் வாய்க்கால்' என்று அழைக்கப்பட்டது

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback