Breaking News

110 அடி ஆழ்குழாய் போர்வெல் மூலம் மழை நீர் சேகரிப்பு

அட்மின் மீடியா
0
தஞ்சை அருகே இளைஞர் ஒருவர் தனது வயலில் செயல்படாமல் வீணாக இருந்த ஆழ்குழாய் போர்வெல் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்க  அதில் புதிய முறையில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை உயரச் செய்திருக்கின்றார்

திருவையாறு அருகே உள்ள அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கேட்டரிங்க் முடித்துவிட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் வேலை செய்துவந்தார். விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், வெளிநாட்டில் பார்த்த வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு வந்தவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் நெல் சாகுபடி செய்யத் தொடங்கினார்.



தனது நிலத்தில் 110 அடிக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் போர்வெல் ஒன்றை அமைத்தார். ஆனால் அதில் தண்ணீர் வராமல் போனது.  பின்னர் மீண்டும் வேறு இடத்தில் மற்றொரு போர்வெல் அமைத்து விவசாயம் செய்துவந்தார்.


தண்ணீர் வராத ஆழ்குழாயை என்ன செய்யலாம் என யோசனை செய்த தினேஷுக்கு  மழைநீரை சேமித்து நிலத்தடிக்குள் விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. பின்னர் வீணாக இருந்த போர்வெல் குழாய்களைச் சுற்றி குழி வெட்டி மழைநீரும், வயலில் பாய்ச்சிய பிறகு வீணாகும் உபரி நீரும் நிலத்துக்கு அடியில் செல்லும்படி செய்து மழைநீரை சேகரிக்கத் தொடங்கியுள்ளார். 
 
இது குறித்து தினேஷ் அவர்கள் முன்பெல்லாம் எங்க பகுதியில் 30 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 70 அடிக்கு சென்றுவிட்டது. காவிரி ஆற்றை ஒட்டிய பகுதியிலேயே இந்த நிலை என்றால் மற்ற பகுதியின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். மேலும், தண்ணீர் உப்பு கலந்த தண்ணீராகவும் மாறி வருகிறது. இதற்குக் காரணம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதுதான். இதனால் மழைநீரை சேமிக்கும் அவசியத்தை உணர்ந்தேன். இதையடுத்து, செயல்படாமல் வீணாக இருந்த ஆழ்குழாய் போர்வெலை சுற்றி 10 அடி அகலம், ஆழம், நீளம் என குழி அமைத்தேன். 

அதற்குள் குழாயை ஒட்டி 10 அடி ஆழத்துக்கு குழி எடுத்து கான்கிரீட் உறைகளை இறக்கினேன். பின்னர் உறைக்கு 5 அடிக்கு கிணற்றுக் கல், கரிக்கட்டை, ஜல்லி போன்றவற்றை நிரப்பினேன்.

மேலும், நிலத்துக்குள் இருந்த ஆழ்குழாயில் தண்ணீர் செல்லும் அளவுக்கு ஓட்டை போட்டதுடன் அதில் நைலான் வலை கொண்டு குழாயைச் சுற்றி கட்டிவிட்டேன். எங்கள் பகுதி களிமண் பகுதி என்பதால் மழை பெய்யும்போது அவை உள்ளே சென்று படர்ந்து விடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. மழை பெய்யும்பொழுது உறைகளில் போடப்பட்ட பொருள்களின் வழியாக நீர் சுத்தம் செய்யப்பட்டு கசிந்து உள்ளே சென்று அதன் பிறகு வடிக்கட்டுவதற்காகப் போடப்பட்ட வலை வழியாக ஆழ்குழாய் மூலம் நிலத்தடிக்குள் சென்றுவிடும்.

மழைக் காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இதனால் பயிர் அழுகிவிடும் என்பதால், வாய்க்கால்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றுவார்கள். அந்தத் தண்ணீர் வீணாக செல்லும். அப்படி அந்த நீர் வீணாகாமல் இருக்கவும், மழைநீரை சேமிக்கவுமே இந்தப் புதிய முயற்சியை செய்திருக்கிறேன். மழை நீரையும், வீணாகும் தண்ணீரையும் இந்த போர்வெல்  நிரப்பி விடுவதால் நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது.


செயல்பாட்டில் இருக்கும் ஆழ்குழாய் மூலமும் மழைநீரை சேகரிக்கலாம். இதற்கு ரூ.50,000 செலவானது. கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் அரசு இதை ஊக்குவிக்கிறது. நம் அரசு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எல்லோரும் இதை செய்யத் தொடங்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னை வராமல் தடுக்கலாம்'' என்றார்.

நன்றி:  ஆனந்த விகடன்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback