மசூதிகளில் முஸ்லீம் பெண்கள் வழிபட கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
அட்மின் மீடியா
0
மசூதிகளில், முஸ்லிம் பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர், சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் நாத் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார். அந்த மனு, உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து, அந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, அனிருத்தா போஸ் அமர்வு முன், அந்த மனு, இன்று ஜூலை 8 விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், 'கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற, நாங்கள் விரும்பவில்லை. இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.
கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் போது, 'வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, அதன் விபரங்கள் ஊடகங்களுக்கு சென்று விட்டன. விளம்பரத்திற்காகவே, வேண்டுமென்றே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, நீதிபதிகள், அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.