ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தார்.
இதனால் அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி மாதிரி சோதனைகளின் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளார் கோமதி. அதன் முடிவுகள் சாதகமாக அமையாவிட்டால் அவர் நான்கு ஆண்டுகள் தடையை எதிர்கொள்ள நேரிடும்.
தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீ. தூரத்தை 2:02.70 என்கிற நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் 3-ம் இடத்தில் இருந்த கோமதி கடைசி 100 மீ. ஓட்டத்தில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார். இதனால் செப்டம்பரில் தோஹாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் அவர் தகுதியடைந்துள்ளார்.
பெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி என இரண்டு போட்டிகளிலும் நடத்தப்பட்ட ஊக்க மருந்துப் பரிசோதனைகளில் கோமதி மாரிமுத்து தோல்வியடைந்துள்ளார். நான்ட்ரோலோன் என்கிற ஸ்டீராய்ட் மருந்தை அவர் உட்கொண்டிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருடைய போலந்துப் பயணம் ரத்தாகியுள்ளது.
ஏ மாதிரி பிரிவு சோதனையில் தான் கோமதி தோல்வியடைந்துள்ளார். பி மாதிரி பிரிவு சோதனையிலும் அவர் தோல்வியுற்றால் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில ஊடகங்களுக்கு கோமதி மாரிமுத்து கூறியதாவது: இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில் தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. என் வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை நான் பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன் என்று கூறினார்.
இந்தியத் தடகள சம்மேளனத்தின் தலைவர் அடிலி சுமரிவாலா இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தற்போது அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பி மாதிரி சோதனையின் அவர் வெற்றி பெற்றுவிட்டால் இடைக்காலத் தடை நீக்கப்படும். இல்லாவிட்டால் அவர் நான்காண்டு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியுள்ளார்.