பிராங்க் வீடியோ எடுக்க வெளியிட தடை
அட்மின் மீடியா
0
பிராங்க் ஷோக்களை வெளியிட தடை!
பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்களை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
பிராங்க் ஷோக்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறி அதனை தடை செய்ய வேண்டுமென்று, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையாவது போல இதற்கும் பலர் அடிமையாகியுள்ளனர்.
இதனால் பல்வேறு விதமான ஒழுக்கக்கேடுகள், சமுதாய சீர்கேடுகள் நடைபெறுகிறது. இளம்பெண்களும் டிக் டாக் செயலியில் பங்கேற்று வீடியோக்களை வெளியிடுகின்றனர். அந்த வீடியோக்களை மார்பிங் செய்து ஆபாச வீடியோக்களாகவும் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்களால் பல்வேறு தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.
இத்தகைய சமூக சீர்கேடுகளை முழுமையாக தடுக்க டிக் டாக் செயலியை தடை செய்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு இன்று ஏப்ரல் 3 விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”இந்த டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்து நீதிமன்றம் ஏன் உத்தரவிட வேண்டும்?
ஒவ்வொரு சமூக சீர்கேட்டிற்கும் நீதிமன்றமே ஏன் உத்தரவிட வேண்டும்?
புளூவேல் விளையாட்டுக்கும் நீதிமன்றம்தான் தடை விதித்தது. சமுதாயத்தை, இளைய தலைமுறையைப் பாதிக்கும் இதுபோன்ற வீடியோக்களை மத்திய அரசே தலையிட்டு ஏன் தடை செய்யக்கூடாது?
என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு துறையின் செயலாளர் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது மற்றொரு வழக்கறிஞர் குறுக்கிட்டு ”மிமிக்ரி வீடியோக்கள், பிராங்க் ஷோக்கள் எனப்படும் குறும்பு வீடியோக்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது. நடைபாதையில் நடந்து செல்வோரை திடீரென்று அதிர்ச்சிக்குள்ளாக்கி, அதை மறைந்திருந்து படம்பிடித்து ஒளிபரப்புகின்றனர். இதுபோன்ற செய்கைகள் தனிமனித உரிமைகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.
இதையடுத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இத்தகைய குறும்பு வீடியோக்களுக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.
டிக் டாக் செயலி இந்தோனேசியாவில், மலேசியாவில் தடை செய்யப்பட்டது. அவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனவே இதனை ஏன் மத்திய அரசு இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது என்று கேள்வியெழுப்பி வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பல்வேறு கலாச்சார சீர்கேடுகளுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் டிக் டாக் செயலி காரணமாக இருப்பதால் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பிப்ரவரி 12 சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். அவருக்கு பதிலளித்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக்கை தடை செய்ய மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
