கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் மீது ஆட்சியர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது : உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் மீது ஆட்சியர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது : உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது மாவட்ட எஸ்பியிடம் கலெக்டர் புகார் அளித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த தகவலை அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏவுக்கு எதிராக ஆட்சியரிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் தலைமை வழக்கறிஞர், கலெக்டரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தார். அப்போது எப்ஐஆரை ஆய்வு செய்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கை காவல்துறை இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு இணையத்தில் பதிவேற்றம் செய்தால் வெளியில் கசிந்துவிடும் என்பதால் பதிவேற்றம் செய்யவில்லை என குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்க்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பின.
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர். திரிசூலி என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு திங்கள்கிழமை (நவ. 23) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யன், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து மாநிலத் தலைமைச் செயலர் எம். சாய்குமாருக்கோ அல்லது காவல்துறைக்கோ இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, திங்கள்கிழமை பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனுவை நேரில் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அந்தப் புகாரில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags: தமிழக செய்திகள்
