நிலவில் ஹோட்டல் இப்போதே முன்பதிவு செய்யலாம். தங்குவதற்கு 1 நாள் விலை என்ன தெரியுமா a hotel on the moon?
நிலவில் உலகின் முதல் ஹோட்டல் அமைக்கும் திட்டத்தினை அமெரிக்காவின் GRU Space நிறுவனம் அறிவித்துள்ளன, இதில் தங்குவதற்கு தற்போது முன்பதிவுகள் (booking) கூட தொடங்கப்பட்டுள்ளன, எனினும் இது இன்னும் கட்டுமான நிலையில் உள்ளது. 2032-க்குள் முதல் ஹோட்டல் செயல்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற 'பேலஸ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்' கட்டிடத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நிலவில் ஒரு பிரம்மாண்ட ஹோட்டலை உருவாக்குவதே 'GRU ஸ்பேஸ்' நிறுவனத்தின் இலக்காகும்.
இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்கைலர் சான், விண்வெளிப் பயணத்தை அனைவருக்கும் சாத்தியமாக்கும் நோக்கில் இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 2029-ஆம் ஆண்டில் நிலவுக்கு ஒரு சிறிய விண்கலத்தை அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதில் நிலவின் மண்ணைக் கொண்டு செங்கற்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் காற்றில் விரியும் (Inflatable) கட்டமைப்புகள் சோதிக்கப்பட உள்ளன.
தொடர்ந்து 2032-ஆம் ஆண்டில், நான்கு விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட முதல் ஹோட்டல் நிலவில் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் தங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் தற்போது 2.5 லட்சம் டாலர் முதல் 10 லட்சம் டாலர் வரை முன்பதிவுத் தொகையாக செலுத்தி தங்களின் இடத்தைப் பதிவு செய்யலாம்.
2031 ஆம் ஆண்டில் விண்வெளி செல்வதற்காக பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.பெரும் தொழிலதிபர்கள் மற்றும் வித்தியாசமான முறையில் தேனிலவு கொண்டாட விரும்பும் புதுமணத் தம்பதிகள் இதன் ஆரம்பகட்ட வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. இதில் ஒரு நபருக்கு தோராயமாக 2,00,000 டொலர் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பூமியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தை தாண்டி, கார்மன் கோடு என்று அழைக்கப்படும் விண்வெளியின் எல்லைக்கு சற்று மேலே அழைத்து சென்று விண்வெளியின் எடையற்ற தன்மையை அனுபவிக்க வைத்து அழைத்து வந்துள்ளது ப்ளூ ஆர்ஜின்
Tags: முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்

