யார் தலைவர் ? மாம்பழம் சின்னம் முடக்கப்படும் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆனையம் பதில்
யார் தலைவர் ? மாம்பழம் சின்னம் முடக்கப்படும் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆனையம் பதில்
அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் கட்சி யாருக்கு? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அன்புமணி, கட்சியை அபகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், ஒரு கோடி உறுப்பினர்கள் அவருக்கு கீழ் உள்ளனர், அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறு செய்துள்ளது' என ராமதாஸ் தரப்பு குற்றம்சாட்டியது.
கட்சியின் தலைவராக பாமக தன்னை அங்கீகரித்துள்ளதாக அன்புமணி தரப்பு வாதத்தை முன்வைத்தது.இரு தரப்பும் தனது வாதங்களை முன்வைத்த நிலையில், தேர்தல் ஆணையம் தனது பதிலில், "எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம். கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும்" என்று கூறியுள்ளது.
அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் கூறுகையில், "பாமக கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது,
ஒரு தரப்பு வாதத்தையும் அவர்களின் கடிதங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. இதுதொடர்பாக உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை நாடலாம்" என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
பாமகவில் தலைமை பிரச்சினை நீடித்து வருகிறது.ராமதாஸ், அன்புமணி இடையில் பிரச்சினை தொடர்ந்தால் படிவம் ஏ, பி ஆகிய இரண்டிலும் இரு தரப்பும் கையெழுத்து போடுவதை ஏற்க இயலாது.
எனவே ராமதாஸ் தரப்பிற்கோ, அன்புமணி தரப்பிற்கோ மாம்பழம் சின்னத்தை ஒதுக்க முடியாது. எனவே வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கும் பாமகவிற்கு புதிய சின்னம் ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்