Breaking News

திருவள்ளூர் அருகே ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்க்கு ஆசைப்பட்டு தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்த மகன்கள் நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

திருவள்ளூர் அருகே ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்க்கு ஆசைப்பட்டு தந்தையை  பாம்பை விட்டு கடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்த மகன்கள் நடந்தது என்ன 



திருவள்ளூர் அருகே ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம் மற்றும் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையைக் கொன்ற மகன்கள் தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்த கொடூர சம்பவத்தில் இரு மகன்கள் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில், இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு அரசுப் பள்ளி ஊழியரான தந்தையை, அவரது மகன்களே பாம்பை விட்டு கடிக்க வைத்துக் கொலை செய்துள்ள திடுக்கிடும் உண்மை அம்பலமாகியுள்ளது. 

பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (56), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். 

கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி அதிகாலை, அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது மகன்கள் போலீசில் புகார் அளித்தனர். 

இந்நிலையில் கணேசனின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த இன்சூரன்ஸ் நிறுவனம், இது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கணேசனின் மகன்கள் மோகன்ராஜ் மற்றும் ஹரிஹரன் ஆகியோரை ரகசியமாகக் கண்காணித்து விசாரணை நடத்தினர். 

அதில், கணேசன் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உயர் மதிப்பு இன்சூரன்ஸ் பாலிசிகள் இருப்பது தெரியவந்தது. இந்த இன்சூரன்ஸ் பணத்தை உடனடியாகப் பெறத் திட்டமிட்ட மகன்கள், தங்களது தந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக அவர்கள் மணவூரைச் சேர்ந்த பாலாஜி, பிரசாந்த், நவீன் குமார் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினகரன் ஆகிய நான்கு பேருடன் கைகோர்த்தனர். திட்டமிட்டபடி, கணேசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு சாக்குப்பையில் கொண்டு வந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை அவரது கழுத்தில் கடிக்க வைத்துள்ளனர். 

பாம்பு கடித்த வேதனையில் அவர் துடித்தபோது, அது ஒரு விபத்து போலக் காட்டுவதற்காகப் பாம்பை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். 

தந்தை இறந்த பிறகு, மிகவும் சோகமாக இருப்பது போல நடித்து இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், மகன்கள் இருவரும் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொடூரக் கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மோகன்ராஜ், ஹரிஹரன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பணத்திற்காகப் பெத்த தந்தையையே விஷப் பாம்பை வைத்துக் கொலை செய்த மகன்களின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback