டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து நடந்தது என்ன முழு விவரம்
திங்கள்கிழமை மாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நகரங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் ஹை அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செங்கோட்டை அருகே திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் மெட்ரோ ஸ்டேஷன் கேட்-1 இன் வாகன நிறுத்துமிடத்தில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களிலும் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர்.
தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மெதுவாகச் சென்ற வாகனம் சிக்னலில் நிறுத்தப்பட்டபோது வெடிப்பு ஏற்பட்டதாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார்.
ஹூண்டாய் i20 கார் வெடித்த நிலையில், அந்த கார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள டோல் பிளாசாவில் கருப்பு மாஸ்க் அணிந்த ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லி காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), வெடிபொருள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. கோட்வாலி காவல் நிலையம் UAPA மற்றும் வெடிபொருள் சட்டத்தின் 16 மற்றும் 18 பிரிவுகளின் கீழ் வழக்கை விசாரித்து வருகிறது.
டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற தீவிரவாதி எனத் தகவல். ஹரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.
சுமார் 3 மணிநேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார், மாலை 6.48க்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த |பிறகு வெடித்துள்ளது. முகமது உமரின் தாய், சகோதரி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
Tags: இந்திய செய்திகள்
