அமெரிக்க கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே இந்தியர்கள் வயதாகி இறந்துவிடுவார்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 4 Lakh Indians May Die Without Green Card
அமெரிக்க கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே இந்தியர்கள் வயதாகி இறந்துவிடுவார்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
உயர்கல்விக்காகவும், பணியின் காரணமாகவும் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கும் இந்தியர்களில் பலர் அந்நாட்டிலேயே நிரந்தரமாக குடியேற விண்ணப்பங்களை தாக்கல் செய்வது வழக்கம்.
இந்த கிரீன் கார்டை பெறுவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடும் போட்டி இருப்பதால் கிரீன் கார்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்பிடி ஒரு நிதியாண்டில், ஒரு நாட்டுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையிலேயே கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவில் கிரீன் கார்டிற்கு விண்ணப்பித்து இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 18 லட்சமாகும்.
இது அந்நாட்டில் குடியேற விண்ணப்பித்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை ஆகும்.
இந்த எண்ணிக்கையில் 63 சதவீதம் பேர் இந்தியர்கள்.இந்நிலையில், புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் இந்தியர்களுக்கு "காத்திருப்பு காலம்" சுமார் 134 வருடங்கள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
கிரீன் கார்டு என்றால் என்ன:-
கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக அந்நாட்டிலேயே தங்குவதற்கு அனுமதிக்கும் ஆவணமாகும்
நிரந்தர வசிப்பிட அட்டை (Permanent Resident Card) அலுவல் ரீதியாக பி.ஆர். கார்டு என குறிப்பிடப்படும்
இது, வழக்கத்தில் கிரீன் கார்ட் என குறிப்பிடப்படுகிறது.
நிரந்தரக் குடியுரிமை கிரீன் கார்டு மூன்று வகையானவர்களுக்கு வழங்கப்படுகிறது
- ஏற்கனவே கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கிரீன் கார்ட் காலாவதியாகும் போது புதுப்பித்தல்.
- அமெரிக்க குடிமக்களின் உறவினர்கள்.
- வேலை விசாவில் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள்.
கிரீன் கார்ட் வைத்திருக்கும் ஒருவர் அமெரிக்க குடிமகனைத் திருமணம் செய்துகொண்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் ஒருவர் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் பிறந்த நாட்டிற்கு உங்களை நாடு கடத்த முடியாது. கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்க குடிவரவுச் சட்டங்களில் எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டாலும் ஒருவருக்கு கொடுத்த நிரந்தரக் குடியுரிமையைப் பறிக்கமுடியாது. ஆனால்,
கிரீன் கார்டு வைத்திருப்பவர் அமெரிக்க சட்டத்தை மீறினால் நாடுகடத்தப்படுவர்.
மற்ற விசா வைத்திருப்பவர்களை விட கிரீன் கார்ட் வைத்திருப்பவர் எளிதாக அமெரிக்காவிற்குப் பயணம் செய்யலாம்.
நிரந்தர குடியிருப்பாளர்கள் அரசாங்க வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இப்படி பல சலுகைகள் உள்ள கிரீன் கார்டு பெற பலர் விண்ணப்பித்துள்ளார்கள் மேலும் கிரீன் கார்டுகளுக்கு தகுதியானவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்பதால் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேடோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
தற்போது நாட்டில் நிலுவையில் உள்ள 18 லட்சம் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களில் 63 சதவீதம் இந்தியர்களின் விண்ணப்பங்கள். இதுதவிர குடும்ப அமைப்பிலிருந்து வரப்பெற்ற 83 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இந்தியாவில் இருந்து புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள், 134 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும். இதன்மூலம், வேலைவாய்ப்பு அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் சுமார் 4,24,000 பேர் காத்திருக்கும் காலத்தில் மரணம் அடைவார்கள்.
அவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களாக இருப்பார்கள். புதிய முதலாளிகளால் வழங்கப்படும் விண்ணப்பதாரர்களில் இந்தியர்கள் பாதியாக இருப்பதால், புதிதாக ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களில் பாதி பேர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்பே இறந்துவிடுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்