துபாயில் இருந்து 3 ஆண்டுகள் கழித்து தாயின் மீன்கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன் வைரல் வீடியோ
துபாயில் இருந்து 3 ஆண்டுகள் கழித்து தாயின் மீன்கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன் வைரல் வீடியோ
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கங்கொல்லி கிராமத்தில் மீன் விற்பனை செய்யும் பெண் ஒருவரின் மகன் துபாயில் இருந்து திரும்பிய நிலையில், முகத்தை மறைத்துக் கொண்டு மீன் வாங்குவதைப் போல் நடித்து பிறகு தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கங்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா. இவரது மகன் ரோகித். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் சென்றார். சுமித்ரா கங்கொல்லி மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், 3 ஆண்டுகள் கழித்து ரோகித் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார்.ஆனால் தான் ஊருக்கு வருவது குறித்து தாய் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்தார்.
துபாயில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு வந்தடைந்த அவர் வீட்டுக்கு செல்லாமல், நேராக தாய் சுமித்ரா மீன் வியாபாரம் செய்யும் மார்க்கெட்டுக்கு சென்றார்.
தனது தாயிடம் சர்ப்ரைஸாக செல்ல தனது தாய்க்கு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கைக்குட்டையால் தனது முகத்தை மறைத்து தொப்பி, கண்ணாடி போட்டு மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல் அவர் முன் சென்றார்.தாயிடம் சென்று மீன் விலையை கேட்டுள்ளார்.
சுமித்ராவும் முதலில் யார் என தெரியாமல் மீன் விலையை தெரிவித்துள்ளார். பின்னர் ரோகித், மீன் விலையை குறைக்கும்படி தாய் சுமித்ராவுடன் பேரம் பேசி உள்ளார்.
வாடிக்கையாளரின் சைகையையும் குரலையும் கவனித்த தாயின் உள்ளம் இது தன் மகன் என்று அறிந்துகொண்டார். பின்னர் அவர் அணிந்திருந்த தொப்பி, கைக்குட்டையை விலக்கி பார்த்தபோது, தனது மகன் ரோகித் நிற்பதை கண்டு சுமித்ரா இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஆனந்த கண்ணீருடன் தனது மகன் ரோகித்தை சுமித்ரா கட்டித்தழுவினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ