கடலூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு
கடலூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் முன்பக்கத்தின் டயர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
வீடியோ பார்க்க;-
https://twitter.com/vijaythehindu/status/1670680187212578816
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.
ம ேலும், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்களையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
Tags: தமிழக செய்திகள்