Breaking News

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை 25000அபரதாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

பொதுமக்கள், தனியார் விளம்பர நிறுவனங்களின் கவனத்திற்கு விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் அனுமதியின்றி நிறுவக்கூடாது, மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35இன்படி திருத்தப்பட்ட 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர  உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியும், அதன்கீழ் உருவாக்கப்பட்ட 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பரப் பலகைகள் (Hoardings), பேனர்கள் மற்றும் பதாகைகள் (Banners and Placards) ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் 13.04.2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117-0 இன்படி அகற்றப்படவேண்டும்.

அதேபோல, உரிமக்காலம் முடிந்தபின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-P இன்படி அகற்றப்பட வேண்டும்.

மேற்படி பிரிவுகள் 117-0, 117-P ஆகியவற்றின்படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்றத் தவறினால், அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றிவிடும். பின்பு, அதற்கான செலவினம் பிரிவுகள் 117-0, 117-P மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடமிருந்து அல்லது தனி நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும்

மேற்கூறிய விதிமுறைகளை மீறி செயல்படும், நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25,000/- அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000/- அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விதிகள் 322, 341இல் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். மேலும், உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback