கல்லூரி மாணவிகளுக்கு போலிஸ் அக்கா திட்டம் துவக்கம் police Akka Scheme
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த காவல்துறையும், கல்லூரி நிர்வாகங்களும் பல முயற்சிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் முதல் முறையாக கல்லூரியில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக 'போலீஸ் அக்கா' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியான என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.இதனை போக்க பெண் காவலர்களிடம் தங்கள் குறைகளை கூற இந்த போலிஸ் அக்கா திட்டம் துவங்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டு மாணவிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பார்.
கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும், சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டுச் சென்று தீா்வு காண்பார்.
கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு அவா்கள் தரும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்த பெண் காவலா்கள் ஈடுபடுவாா்கள்
காவலரின் தொடர்பு எண்கள் அனைத்து மாணவிகளுக்கும் பகிரப்படும். காக்கி உடையில் இருக்கும் சகோதரிகள் அவ்வப்போது கல்லூரிகளுக்குச் சென்று மாணவிகளுடன் நல்ல உறவைப் பேணுவார்கள்.
போலீஸ் அக்கா என அழைக்கப்படும் இவர்கள் காவல்துறையில் நம்பிக்கைக்குரிய நபர்களாக இருந்து, அவசர காலங்களில் மாணவிகள் தங்குவதற்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணையத்தில் இருக்கும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இவர்களது கடமையாகும்
Tags: தமிழக செய்திகள்