பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை ஏன்!!! மத்திய அரசின் காரணங்கள் முழு விவரம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது.
கடந்த 22ம் தேதி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சுமார் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்தனர்.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பினால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தியாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடை விதிக்கப்படுவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை கூறியுள்ளது.அதில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஒரு சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக செயல்படுகின்றன என்பது போல் தோன்றினாலும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மூளை சலவை செய்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் செயல்பட்டு, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்க திட்டம் தீட்டப்படுகிறது. நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற துணை அமைப்புகளை உருவாக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இப்படி பல துணை அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் பலரை அமைப்பில் சேர்த்து உள்ளது.
2006 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முக்கிய உறுப்பினர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (SIMI) தலைவர்கள் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) உடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும், ISIS போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறைய குழுக்களை இந்த அமைப்புகள் மூலம் உருவாக்கி அதன்மூலம் சட்டத்திற்கு விரோதமான செயல்கள், கூட்டங்கள், திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் . இதன் மூலம் மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்று பலரை சந்தித்து அவர்களை தங்கள் குழுவிற்குள் இணைத்து உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்தும், ஹவாலா மூலமும், வங்கிப் பரிமாற்றத்தின் மூலமும் பிஎப்ஐஅமைப்பும், நிர்வாகிகளும் ஏராளமான பணத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளனர். இந்த பணத்தின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள், தீவிரவாதச் செயல்கள், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை செய்ய பயன்படுத்தியுள்ளனர்
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கொலைகளில் ஈடுபட்டு உள்ளனர் எனவே இந்த அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும் என்று குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடக மாநில அரசுகளும் பரிந்துரை செய்தது.
இவர்கள் வெளிப்படையாக சமூக சேவை அமைப்பு போல செயல்பட்டாலும், உள்ளே அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை செய்து வருகிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். முக்கியமாக குறிப்பிட்ட சமுதாய மக்களை ஓரம்கட்டி, அவர்களை தப்பான திசைக்கு கொண்டு செல்கிறார்கள். இவர்கள் நீதிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்