Breaking News

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம் - வன்முறையாக மாறிய போராட்டம் 144 தடை உத்தரவு..முழு விவரம்...

அட்மின் மீடியா
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது



மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது.

மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பிரேத பரிசேததனை அறிக்கையில், மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.

மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தநிலையில் இன்று பள்ளி முன்பாக அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஒருகட்டத்தில் காவல்துறையினர் மீது கல்வீச்சு சம்பவமும் ஏற்பட்டது.போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசியதோடு, அங்குள்ள பொருட்களை சூறையாடினர். அதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்துகள் அனைத்திற்கும் தீ வைத்துக் கொளுத்தினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்திருந்த போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற, டிஐஜி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி லைலேந்திர பாபு எச்சரித்துள்ளார் 

அதேபோல் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நைனார் பாளையம் ஆகிய இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback