ஆகஸ்ட் 3 முதல் அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் தொடக்கம்....
தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பார்சல் சர்விஸ் தொடங்க உள்ளது
தற்போது ஆம்னி பேருந்துகள், லாரிகளில் பயணியருடன் பார்சல் சர்வீசும் உண்டு ஆனால் அரசு பேருந்தில் அது போல் பார்சல் சர்விஸ் கிடையாது
இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் விரைவு பேருந்துகளில் பார்சல்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை மக்களுக்கு பயன்படும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கும் பார்சல் பெட்டியை மக்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த செலவில் தங்கள் பார்சல்களை பாதுகாப்பாக அனுப்ப முடியும்.
இது சம்மந்தமாக வெளியான அறிவிப்பில்
மாநிலம் முழுவதும் சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் பொருட்களை பல்வேறு ஊர்களுக்கும் அனுப்ப லாரி. மினி டோர் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். லாரி வாடகைக்கு இணையான தொகையில் அவர்கள் தங்கள் பொருட்களை அரசு விரைவு பேருந்துகள் மூலம் விரைவாக உடனுக்குடன் பல ஊர்களுக்கு அனுப்பும் வகையில் விரைவு பேருந்துகளின் பார்சல் பெட்டிகள் வாடகைக்கு அளிக்கப்பட உள்ளன.
இதனால் பல ஊர்களில் உள்ள பிரபலமான உணவு பொருட்கள், விளைபொருட்களை உடனுக்குடன் அரசு விரைவு பேருந்துகள் மூலம் அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். இந்த திட்டம் ஆகஸ்டு 3 முதல் தொடங்கப்பட உள்ளது.
இதற்கு பயனர்கள் அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனுப்ப முடியும். படிப்படியாக தமிழகத்தின் மற்ற ஊர்களிலிருந்து இயக்கப்படும் விரைவு பேருந்துகளிலும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்