தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒட்டகங்களை பலியிட்டால் நடவடிக்கை.. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் சட்ட விரோதமாக ஒட்டகங்களை கொண்டு வந்து பலியிட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக ஒட்டகங்களை கொண்டு வருவதையும், அவற்றை பலியிடுவதையும் தடுக்க உத்தரவிடும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு தலைமை நீதிபதிகள்எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
ராஜஸ்தான் உள்ளிட்ட இதர மாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் கொண்டு வரப்படுவதாகவும், அவற்றை கொடூரமான முறையில் கொல்வதாகவும், மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துக்குமார், ''சென்னையில் ஒட்டகங்களை கொல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகளில், சட்டவிரோதமாக கொண்டு வருவதும், கொல்லப்படுவதும் நடக்கவில்லை. அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.மேலும்
ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வருவதையும், கொல்லப்படுவதையும் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இதை தடுத்து நிறுத்த, அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும். யாராவது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்