எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்து எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் இன்று காலை சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊரகத் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர் தனது பதவிக் காலத்தில், வருமானத்தை விட ரூ.58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி வேலுமணி மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேலும் 3 வழக்குகள் பதிந்துள்ளனர்.மேலும்,அவரது மனைவி,சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில்,எஸ்.பி.வேலுமணி உள்பட 13 பேர் மற்றும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கோவையில் எஸ்.பி. வேலுமணி வீடு, அவரது உதவியாளர் சந்தோஷ் வீடு உள்ளிட்ட 41 இடங்களிலும், செனனையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்களிலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும் என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Tags: தமிழக செய்திகள்