தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது - தமிழக அரசு!
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்தின் அருகே உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. அதன்பின்புடாடா நிறுவனம் அளித்த விளக்கத்திற்க்கு பின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வுப்பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.
அதன்பின்பு நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது. நியூட்ரினோ திட்டத்தைவிட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்