Breaking News

ஹிஜாப் விவகாரம்.. 3 நாட்கள் கல்லூரிகள் விடுமுறை - கர்நாடக அரசு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மாணவிகள் முறையிட்டுள்ளனர். 





இதனிடையே ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக அம்பேத்கரை பின்பற்றக் கூடிய மாணவர்கள் நீல நிற துண்டு அணிந்து ஜெய்பீம் கோஷத்தை எழுப்பி வருகின்றனர். பதிலுக்கு அவர்களும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை எழுப்ப கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஒருவித பதற்ற நிலை சூழ்ந்து கொண்டுள்ளது. 

இதனிடையே, கல்லூரிகளில் ஹிஜாப் தடைக்கு எதிரான மனு மீதான விசாரணை நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி மற்றும் அமைதியைப் பேணுமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இச்சூழலில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கர்நாடாகாவில் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும்  ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்ற பிற்பகல் தொடரும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback