படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேர் தேர்வு முடிவுகள் ரத்து....
20 வருடங்களுக்கு மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட சிலர் முறைகேடாக பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1980-1981 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று அறிவித்திருந்தது.
2020ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் செமஸ்டர் தேர்வில், தொலைதூரக் கல்வி மூலம் பயின்று 20 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் சென்னை பல்கலைக் கழகத்தின் அறிவிப்பை பயன்படுத்தி அரியர் மாணவர்கள் பலரும் ஆன்லைனில் தேர்வு எழுதினர்.
ஆனால் இந்த அறிவிப்பை முறைகேடாக பயன்படுத்த முயன்ற பல தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், எந்த பட்டப் படிப்பிலும் சேராத மாணவர்களை, தேர்வு எழுத வைத்துள்ளனர்.
ஆன்லைன் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, தொலைதூரக் கல்வி மூலம் தேர்வு எழுதியவர்கள் விவரங்களை சென்னை பல்கலைக் கழகம் ஆய்வு செய்தது.
அதில், 117 பேருக்கு செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றில் மாறுபட்ட தகவல்கள் இருந்ததால் படிக்காமலேயே பட்டம் பெற முயன்றவர்கள் சிக்கிக்கொண்டனர்.
ஆன்லைன் தேர்வை முறைகேடாக பயன்படுத்திய தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற ஒவ்வொருவரிடமும் தலா மூன்று லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்து சென்னை பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் முறைகேடாக வேறு யாரும் தேர்வு எழுதியுள்ளார்களா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழுவை அமைத்தும் சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்