Breaking News

ஒரு முதலமைச்சராக மட்டும் இல்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது முதலமைச்சர் உருக்கமான பேச்சு!

அட்மின் மீடியா
0

அன்புக் குழந்தைகளே, ஒரு முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” என மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளில் தெரிவித்துள்ளார்


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி

 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ மூலம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அதில்

சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் - அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும்போது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது

அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில், அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில், இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது! 

விட்றாதீங்கப்பா…” என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் பணிபுரியும் இடங்களில் பொது வெளிகளில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

அதில் சில சம்பவங்கள்தான் வெளியில் வருகிறது. மற்றவை அப்படியே மறைக்கப்படுகிறது. சக உயிராக பெண்ணைப் பார்க்கும் எண்ணம் தோன்றாத வரை இதனைத் தடுக்க முடியாது. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப் பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன் வர வேண்டும்.

அன்புக் குழந்தைகளே… உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு முதல்வராக மட்டுமல்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்ந்துதான் போராட வேண்டும். வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக உங்கள் சகோதரனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இருக்கிறோம்” என்று அதில் கூறியுள்ளார்.

முழுவீடியோ பார்க்க:-

https://twitter.com/CMOTamilnadu/status/1464079490552762371




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback