தமிழகத்தில் நாளை முதல் 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 25ஆம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 22-ந் தேதி இன்று தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
23-ந் தேதி
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
24-ந்தேதி
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
25-ந் தேதி
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்