Breaking News

தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளில் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளில் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி முழு விவரம்



திருச்சி கிழக்கு 

தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே இத்தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

பெருந்துறை தொகுதி

அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் பெருந்துறை தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.

அம்பாசமுத்திரம் தொகுதி

அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து காந்திமதிநாதன் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.

விராலிமலை தொகுதி

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் விராலிமலை தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செல்லபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

கரூர் தொகுதி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் கரூர் தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் மதியழகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி வழக்கறிஞர் வெங்கடாசலபதி பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இடைத்தேர்தல் நடைபெற்ற பின்னர், ஏற்கெனவே தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் மற்றொரு வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டால், ஒரே தொகுதிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உருவாகும் சட்டச் சிக்கல் ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்தே 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க ஜூலை 10-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் இந்த வழக்கில் ஆகஸ்ட் 24-ந் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மற்ற 3 தொகுதிகளில் தேர்தல் வழக்கு முடிந்த பிறகே இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகள் மட்டுமின்றி, கொளத்தூர் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback