மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அட்மின் மீடியா
0
மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற உரிமையில்லை என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 15) உறுதி செய்தது.
இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், பட்டியலின பிரிவைச் சோ்ந்தவா்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது, அவா்கள் தொடா்ந்து இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில், இஸ்லாம் மதத்தின் 7 உள்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவா்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சான்றிதழ் வழங்கலாம்’ என கடந்த 2024-ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர் அந்த தீர்ப்பில் மதம் மாறிய இஸ்லாமியர்கள் ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு பெற முடியாது. மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சிறப்பு சலுகைகளை வழங்க முடியாது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
தீர்ப்பில்;-
மதம் மாறி இஸ்லாமை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சாதிச்சான்றிதழ் தரக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், "இந்து சமூக அமைப்பிலிருந்து இந்து அல்லாத வேறொரு சமூக அமைப்பிற்கு மதம் மாறிய ஒருவர், தான் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இந்திய அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளைக் கோர முடியாது.
முந்தைய சமூக அமைப்பில் அவர் அனுபவித்த பின்தங்கிய நிலை, அவர் மாறிய புதிய மதத்திலும் அவருக்கு 'பின்தங்கிய வகுப்பு' என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கு அடிப்படையாக அமையாது.
அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையின் 3-வது பிரிவின்படி, இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் தவிர வேறொரு மதத்தைப் பின்பற்றும் நபர், 'பட்டியல் சாதி' உறுப்பினராகக் கருதப்பட மாட்டார்.
எனவே, அதில் குறிப்பிடப்படாத வேறொரு மதத்திற்கு மாறிய ஒரு நபர், தனது முந்தைய சாதியுடன் தொடர்புடைய 'பட்டியல் சாதி' அந்தஸ்தை இழக்கிறார்.
இத்தகைய சூழலில், அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் 'பட்டியல் சாதி' உறுப்பினராக இருப்பதன் அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளை அவர் கோர முடியாது.
ஒரு நபர் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலை, அவர் மதம் மாறிய பிறகு, வேறொரு குறிப்பிட்ட பின்தங்கிய சமூகப் பிரிவில் உறுப்பினராகச் சேருவதற்குத் தேவையான சட்டப்பூர்வ அடிப்படையை வழங்க முடியாது.
மாறாக, இந்து சமூக அமைப்பிலிருந்து வேறொரு சமூக அமைப்பிற்கு மாறிய ஒருவர், மீண்டும் இந்து சமூகத்திற்குத் திரும்பும்போது, அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் அவருக்குச் சாதகமான நடவடிக்கைகளைப் பெறுவதற்கான உரிமை உள்ளதா என்பதை, அவர் முன்பு கொண்டிருந்த நிலையை மட்டும் வைத்துத் தீர்மானிக்க முடியாது" என்றும் கூறியுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
