மெட்ரோ ரயிலில் செல்போனில் சத்தமாக பேசினால் அபராதம்! முழு விவரம்
மெட்ரோ ரயிலில் செல்போனில் சத்தமாக பேசினால் அபராதம்! முழு விவரம்
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போது இனி அலைபேசியை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002, பிரிவு 59-ன் கீழ், ரயிலுக்குள் அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுவது, ஹெட்போன் பயன்படுத்தாமல் இசை கேட்பது அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, போனை ஸ்பீக்கர் மோடில் போட்டு மற்றவர்களுக்கு இரைச்சல் ஏற்படுத்துவது போன்ற செயல்கள் குற்றமாகக் கருதப்படும் இந்த விதிகளை மீறுவோருக்கு உடனடியாக ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
இரைச்சல் ஏற்படுத்தி சக பயணிகளின் அமைதியைக் கெடுப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்.
மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலைய வளாகத்திற்குள் அமைதியான சூழலைப் பராமரிக்க பயணிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அலைபேசி பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெட்போன்களைப் பயன்படுத்தவும், உரத்த குரலில் பேசுவதைத் தவிர்க்கவும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Tags: தமிழக செய்திகள்
