25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் புக்கிங் - மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்..!
25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் புக்கிங் - மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்..!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, மார்ச் 1 அன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தின.
இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டு, தற்போது சென்னையில் ரூ. 928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 114 உயர்த்தப்பட்டு, ரூ. 2,043-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சிலிண்டர் பதுக்கலைத் தடுக்கும் நோக்கத்தோடு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முன்னெடுப்பு விநியோகக் கொள்கை என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இனி ஒரு வாடிக்கையாளர் கேஸ் சிலிண்டரை பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இதற்கு முன்பு இந்த இடைவெளி 15 முதல் 21 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
25 நாட்களுக்கு முன்பாகவே எவரேனும் சிலிண்டரை புக் செய்ய முயன்றால், அந்த முன்பதிவு தானாகவே ரத்து செய்யப்படும். எரிவாயு தட்டுப்பாட்டை போக்கவும், கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
சிலிண்டர்களை முன்பதிவு செய்தும் நீண்ட நாட்களாக டெலிவரி செய்யப்படவில்லை என்றாலோ, முன்பதிவு தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டாலோ அல்லது கேஸ் டெலிவரி ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்டாலோ, வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Grievance Portal மூலமாகவும் Cash Memo Not Given, Delay in Refill Supply போன்ற பிரிவுகளின் கீழ் நேரடியாக புகார்களை பதிவு செய்யலாம்.
மத்திய அரசின் இந்த புதிய 25 நாள் கட்டுப்பாட்டு விதிமுறை, கேஸ் சிலிண்டர்கள் சீராகவும் தடையின்றியும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
