பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயரும் என பரவும் தகவல் வதந்தி - மத்திய அரசு அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயரும் என பரவிய தகவல்களை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மறுத்துள்ளது.
இத்தகைய விலை உயர்வுக்கான எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை என்றும், இது போன்ற செய்திகள் தவறானவை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது
மத்திய அரசு மறுப்பு: 5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு எரிபொருள் விலை உயரும் என்ற கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் (Kotak Institutional Equities) அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதைச் சமாளிக்க, ஒரு லிட்டர் விலை சுமார் ரூ.25 முதல் ரூ.28 வரை உயரக்கூடும் என்று அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு 25-28 ரூபாய் வரை உயர்வு ஏற்படக்கூடும் என்று 'கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்' நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி சில செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்த பின், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இது போன்ற செய்திகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை; அவை, தவறாக வழி நடத்துபவை.
கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா மட்டுமே. சர்வதேச விலைகளில் ஏற்படும் கடும் உயர்வில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க, மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இடைவிடாத நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பணவீக்க அழுத்தங்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் மத்திய அரசின் பரந்த முயற்சிக்கு இணங்க, கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை உள்வாங்கி, எண்ணெய் நிறுவனங்கள் சில்லரை விற்பனை விலைகளை நிலையாக வைத்துள்ளன.
சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற சரிபார்க்கப்படாத தகவல்களால், மக்கள் தவறாக வழி நடத்தப்பட வேண்டாம். அவை போலியான தகவல். எனவே, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நீடிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
