Breaking News

வரைவு வாக்காளர் படிவம் வெளியானது - பொதுமக்களின் கேள்விகள் - சந்தேகங்கள் அதற்கான பதில்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மற்றும் அதன்பிறகு வாக்காளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs).



1. 14.12.2025 அன்று கணக்கீட்டு காலம் முடிந்த பிறகு என்ன நடைபெறும்?

14.12.2025 வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பித்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் சேர்த்து வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்படும்.

2. ஒரு வாக்காளர் தனது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறிய இயலும்?

வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்படும். வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளம் மற்றும் www.elections.tn.gov.in என்ற தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் இணையதளம் ஆகியவற்றில் இந்தப் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். மேலும் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் https://voters.eci.gov.in மூலமாகவும் அணுகலாம். வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலை வாக்காளர்கள் பார்வையிட்டு தங்கள் விவரங்களைச் சரிபார்க்கலாம்.

3. ஒரு வாக்காளர் 14.12.2025க்குள் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால், 19.12.2025 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லாத வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியல்கள், அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் போன்றவற்றின் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். வாக்காளர்கள் மேற்கண்ட அலுவலகங்களிலும், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் பட்டியலை காணலாம். இந்தப் பட்டியல்கள் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

4. குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு உள்ள வாக்காளர்கள் (ASD) பட்டியல் என்றால் என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தின் "தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது" என்ற நோக்கத்தின் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்னதாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLOs) குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு உள்ள வாக்காளர்களின் பட்டியல் (ASD list) தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர்களுடன் (BLAs) வாக்குச்சாவடி அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பட்டியலில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிழைகளை திருத்துவதற்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்ட ASD பட்டியல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டது. மேற்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்-வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களின் நடவடிக்கைகள் குறித்த குறிப்புகள் (Minutes) தயாரிக்கப்பட்டு, கையொப்பத்துடன் வாக்குச்சாவடி முகவர்களின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அக்கூட்ட நடவடிக்கை குறிப்புகள், தலைமை தேர்தல் அதிகாரியின் (CEO) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

5. வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றால் அவர் என்ன செய்ய வேண்டும்?

வாக்காளர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில் (19.12.2025 18.01.2026) அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பரிந்துரைக்கப்பட்ட உறுதிமொழி படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கலாம். வாக்காளர் படிவம்-6 ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) / வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) / உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) அலுவலகத்திலிருந்து பெறலாம். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி அல்லது வாக்காளர் சேவை இணையதளம் (Voter Services Portal) voters.eci.gov.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

6. வாக்காளர் தகுதியைச் சரிபார்க்க ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் எவை?

1. மத்திய அரசு/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்/ஓய்வூதியதாரருக்கு வழங்கப்படும் ஏதேனும் அடையாள அட்டை/ ஓய்வூதிய ஆணை.

II. 01.07.1987 க்கு முன்னர் இந்தியாவில் அரசு/உள்ளாட்சி அமைப்புகள்/வங்கிகள்/ அஞ்சல் அலுவலகம்/ எல்ஐசி/ பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/ சான்றிதழ்/ ஆவணம்.

III. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.

IV. கடவுச்சீட்டு

V. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன் / கல்விச் சான்றிதழ்.

VI. தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்

VII. வன உரிமைச் சான்றிதழ்

VIII. தகுதிவாய்ந்த அதிகாரி வழங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) /அட்டவணை வகுப்பினர் (SC) / பழங்குடியினர் (ST) அல்லது பிற சாதிச் சான்றிதழ்.

IX. தேசிய குடிமக்கள் பதிவேடு (நடைமுறையில் உள்ள இடங்களில்)

Χ. மாநில/உள்ளாட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு.

ΧΙ. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.

XII. ஆதார் அட்டைக்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடித எண். 23/2025-ERS/Vol.II, நாள் 09.09.2025-இல் (இணைப்பு-II) வெளியிடப்பட்ட அறிவுரைகள் பொருந்தும்.

XIII. 01.07.2025 அன்று தகுதி தேதியாக கொண்டு வெளியிடப்பட்ட பீகார் சிறப்புத் தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் நகல்.

7, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியுமா?

ஆம். வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, படிவம்-6 ஐ இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINet செயலி அல்லது வாக்காளர் சேவை இணையதளம் (Voters Service Portal) விண்ணப்பிக்கலாம். voters.eci.gov.in

8. பட்டியலிடப்பட்ட எந்த ஆவணமும் வாக்காளரிடம் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?

வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மேற்கொள்ளும் கள விசாரணையின் அடிப்படையில், அவ்வாக்காளர்களின் பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) / உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) தீர்மானிப்பர்.

9. வரைவு வாக்காளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படும்.

10. ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலம் என்றால் என்ன?

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும். இந்தக் காலகட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், புதிய வாக்காளராகப் பெயரைச் சேர்க்க படிவம்-6ஐ பூர்த்தி செய்து உறுதிமொழிப் படிவத்துடன் சமர்ப்பிக்கலாம். மேலும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவை நீக்க படிவம் -7 மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றுதல் / ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்தல் / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றுதல் / மாற்றுத்திறனாளி என குறிப்பது போன்றவற்றுக்கு படிவம்-8ன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

11, நான் ஒரு புதிய வாக்காளர்; 2026-ஆம் ஆண்டில் 18 வயதை நிறைவு செய்ய உள்ளேன். எதிர்கால தகுதி தேதிகளில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாமா?

2026 ஆம் ஆண்டின் தகுதி தேதிகளான 1 ஜனவரி, 1 ஏப்ரல், 1 ஜூலைமற்றும் 1 அக்டோபர் ஆகிய நாட்களில் 18 வயதை நிறைவு செய்யும் புதிய வாக்காளர்கள், உறுதிமொழி படிவத்துடன் படிவம்-6ஐ சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

12. இந்தச் செயல்பாட்டில் வாக்குச்சாவடி முகவர்களின் (BLAs) பங்கு என்ன?

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்னதாக, அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளுக்குரிய ASD பட்டியலில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிழைகளை கண்டறிந்து திருத்துவதற்கு உதவும் வகையில், ASD பட்டியல் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (BLAs) பகிர்ந்தளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-க்கள்) வரைவு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைக் கண்டறிவார்கள். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தின் போது, வாக்குச்சாவடி முகவர்கள் ஒரு நாளைக்கு 10 படிவங்கள் வரை தேவையான உறுதிமொழியுடன் சமர்ப்பிக்கலாம்.

13. 19.12.2026 10.02.2026 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள அறிவிப்பு காலத்தில் (notice phase) என்ன நடைபெறும்?

கணக்கீட்டு படிவத்தில் வழங்கப்பட்ட முந்தைய SIR வாக்காளர் பட்டியல் விவரங்கள் கிடைக்காததாலோ அல்லது தரவுத்தளத்துடன் பொருந்தாவிட்டாலோ, வாக்காளர் பதிவு அலுவலர் அத்தகைய வாக்காளர்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவார். அத்தகைய வாக்காளர் தகுதிக்கான சான்றாக தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

14. இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026 அன்று வெளியிடப்படும்.

15. படிவம் 6-ஐ யார் சமர்ப்பிக்கலாம்?

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத தகுதியுள்ள வாக்காளரும், தகுதி தேதிகளில் 18 வயதை நிறைவு செய்ய இருக்கும் புதிய வாக்காளர்களும், உறுதிமொழி படிவத்துடன் படிவம்-6 ஐ சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, 17.02.2026 அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை குறித்து தீர்மானிக்கப்படும்.

16.படிவம் 7-ஐ யார் சமர்ப்பிக்கலாம்?

சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளராலும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க கோரிக்கையாகச் சமர்ப்பிக்க படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

17. படிவம் 8-ஐ யார் சமர்ப்பிக்கலாம்?

முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல் / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றுதல் /மாற்றுத்திறனாளி என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம் 8-ஐ சமர்ப்பிக்கலாம்.

18. வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவிற்கு மேல்முறையீடு செய்யலாமா? எப்போது செய்யலாம்?

வாக்காளர் பதிவு அலுவலரின் எந்தவொரு முடிவின் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950இன் பிரிவு 24(a)இன்கீழ் மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட நிர்வாக நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம், மேலும் பிரிவு 24(b)இன்கீழ் முதல் மேல்முறையீட்டு அதிகாரியான மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட நிர்வாக நீதிபதியின் முடிவுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட முறையில் வாக்காளர் பதிவு விதி, 1960 விதி 27இன்கீழ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback