Breaking News

திருச்சி, அரியலூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது என்ன முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பரப்புரை செய்யத் திட்டமிட்டு 

திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை அருகே காலை 10.35 மணிக்குப் பரப்புரை தொடங்குவதாகவும், அதனைத் தொடர்ந்து, பிற்பகல் ஒரு மணிக்கு அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பரப்புரை மேற்கொள்வதாகவும், மாலை 4 மணிக்குப் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை செய்யவும், மாலை 5 மணியளவில் வானொலி திடலில் தனது பயணத்தை நிறைவு செய்வதாகவும் தவெக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது



இந்நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை எம்.ஜி.ஆர் சிலைக்கு வருவதற்கு 5 மணி நேரம் ஆனது. காலை 10.30 மணிக்குப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட மரக்கடையில் அவரால் மாலை சுமார் 4 மணியளவில்தான் பேச்சைத் தொடங்க முடிந்தது.

திருச்சியில் தனது முதல் பரப்புரையை விஜய் பேசுகையில்:-

எல்லாருக்கும் வணக்கம். போருக்குப் போவதற்கு முன்பாகப் போரில் ஜெயிப்பதற்காகக் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அதுபோல ஜனநாயகப் போருக்காக இங்கு வந்துள்ளேன்" என்றார்

மக்களை மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் கேள்வி கேட்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறிய விஜய், "மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.கவையும் தி.மு.கவையும் விடமாட்டோம்" என்றார்.

மேலும் அரசியலில் களம் இறங்க அண்ணா முடிவெடுத்த இடம் திருச்சி. பெரியார் வாழ்ந்த மண் திருச்சி. கல்வி மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாக அமையும் எனச் சொல்லுவார்கள்

மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது பரவசமாகிறது. தவெக தொண்டர்களைப் பார்க்கும்போது பரவசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்ளது.

திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொன்னீர்களே.. செய்தீர்களா?. பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் நோக்காம்பரமைஸ். 

தவெக ஆட்சி அமைந்தால் நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம்.” என்று பேசினார். இதனைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் பரப்புரை நிறைவு பெற்றதையடுத்து அரியலூரில் பரப்புரை மேற்கொள்ளத் தவெக தலைவர் விஜய் புறப்பட்டார்.

அரியலூரில் பேசியது என்ன:-

சனிக்கிழமை  மதியம் ஒரு மணிக்கு அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்ட நிலையில் இரவு 8.45 மணி அளவில் அவரது பிரச்சார வாகனம் அரியலூர் வந்தடைந்தது. 

அரியலூரில் உள்ள அண்ணா சிலை முன்பு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

எல்லோருக்கும் வணக்கம். மன்னித்து விடுங்கள் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. திருச்சியில் பேசியபோது மைக்கில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அங்குப் பேசியதை இங்கு மீண்டும் பேசுகிறேன். அந்தக் காலத்துல போருக்குப் போகுறதுக்கு முன்னாடி போர்ல ஜெயிக்க குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சாமியைக் கும்பிட்டு விட்டுதான் போருக்குச் செல்வார்களாம். அது மாதிரி அடுத்த வருஷம் நடக்க இருக்குற ஜனநாயக போருக்குத் தயாராவதற்கு முன்னாடி மக்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென வந்துள்ளேன்.

என்னை இங்குப் பார்க்க வந்துள்ள அம்மாக்கள், சகோதரிகள், அண்ணன்கள், தம்பிகள் என உங்கள் எல்லோரது அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறிந்து விட்டு வரலாம். உங்கள் அன்பு, பாசத்தை விட எனக்கு வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக என்னைப் பார்க்கிறீர்கள். அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்காக உழைக்குறத தவிர வேறு வேலை இல்லை.

நான் தனி ஆளாக இருப்பேன் எனப் பார்த்தார்கள். ஆனால், நான் எப்போதும் மக்கள் கடலோடு இருப்பதை பார்த்த எதிரிகள் நம்மைப் பற்றிக் கடுமையாகப் பேச ஆரம்பித்துள்ளார்கள். நான் மரியாதையாகப் பேசினால் கூட அதைத் தவறாகப் பார்க்கிறார்கள். அதனால் யார் என்ன சொன்னாலும் அண்ணா அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான். ‘வாழ்க வசவாளர்கள்’ என சொல்லிக் கடந்து போக வேண்டியதுதான்.

நம்மை மிக மோசமாக ஆட்சி செய்து கொண்டுள்ள பாசிச பாஜக அரசு, பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க நான் வந்துள்ளேன். இந்தப் பாஜக அரசு நம்மைக் கொடுமை படுத்துகிறது. பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் காணாமல் போயுள்ளனர். இது அனைத்துக்கும் மேலாக வாக்கு திருட்டில் பாஜக ஈடுபடுகிறது. 

இதற்கும் மேலாக மாநில அரசுகளைக் கலைத்து விட்டு ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கும் ஐடியாவையும் கொண்டுள்ளது. அப்போதுதான் தில்லுமுல்லு வேலைகளைத் திறம்பட செய்ய முடியும்.

இதற்கு அடுத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை. இதன் கீழ் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். இதைத் தவெக தொடர்ந்து எதிர்க்கும். அதனால் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணி, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு என எதிர்க்கட்சிகளை அழிக்கும் பணி. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம்.

சரி, பாஜகதான் துரோகம் செய்கிறது என்று பார்த்தால் இங்குத் திமுக அரசு நம்மை நம்ப வைத்து மோசடி செய்கிறார்கள். 505 வாக்குறுதிகளைக் கடந்த தேர்தலின்போது திமுக அறிவித்தது. அதில் முக்கால் வாசி வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாகச் சொன்னீர்களே செய்தீர்களா? 

அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே செய்தீர்களா? 

இப்படி சொன்னது எதையும் ஆளும் திமுக அரசு செய்யவில்லை. அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.சரி நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் எனக் கேட்கிறீர்கள். தீர்வை நோக்கிச் செல்வதும், தீர்வு காண்பது மட்டும்தான் தவெக-வின் லட்சியம். 

நமது தேர்தல் அறிக்கையில் இதைத் தெளிவாகச் சொல்வோம். அதனால் பொய்யான வாக்குறுதிகளைத் தரமாட்டோம். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாகத் தருவோம். 

மருத்துவம், குடிநீர், கல்வி, ரேஷன், அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சார வசதி, பெண் பாதுகாப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம்.

எளிதாக நமது பார்வை என்னவென்று சொல்ல வேண்டுமென்றால் ஏழ்மை மற்றும் வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மற்றும் மனசாட்சி உள்ள மக்களாட்சி. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என விஜய் பேசினார்.

பெரம்பலூர்:-

சுமார் 20 நிமிடம் பேசிவிட்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நோக்கிக் கிளம்பினார். இரவு 10 மணிக்கு மேல் அங்குச் சென்று சேர்ந்தார். தனக்காக மணிக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களை நோக்கிக் கை அசைத்துவிட்டு சென்றார். அடுத்து இரவு 12 மணியைத் தாண்டியும் விஜய் பிரசார வாகனம் பெரம்பலூர் செல்லவில்லை.

குன்னத்திலிருந்துபெரம்பலூா் நான்கு சாலை வரும் வழியில் உள்ள ஒதியம் பிரிவுச் சாலை, சித்தளி, பேரளி, கவுல்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் விஜய்யை பாய்ப்பதற்காக ஆவலுடனும், உற்சாகத்துடனும் காத்திருந்தனர்.

ஆனால், எந்தக் கிராமத்திலும் அவர் வந்த பிரசார வாகனம் நிற்காமல் பெரம்பலூர் நான்குச்சாலை பகுதியை அடைந்தது. அப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், விஜய்யின் பிரசார வாகனம் நிற்காமல் பழைய பேருந்து நிலையம் நோக்கி மெதுவாக ஊர்ந்து சென்றது.

பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வருவார் என சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டா்களும், பொதுமக்களும் காத்திருந்த நிலையில், அவர் அந்த பகுதிக்கு வராமல் சென்று விட்டார் எனும் தகவலை கட்சி நிா்வாகிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்காததால், அதிகாலை 1 மணி வரையில் தொண்டர்கள் காத்துக் கிடந்தனர்.

இதனால், பல மணி நேரமாக உணவுகூட உண்ணாமல் விஜய்யைக் காண காத்துக்கிடந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தனர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback