60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை - அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அப்போது பேசிய அவர், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு யாராவது விண்ணப்பிக்காமல் இருந்தால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், அமைச்சர் பெரியசாமி தொடர்ந்து பேசும்போது, "ஒன்றிய அரசின் நிதி கிடைக்காத நிலையிலும், மாநில அரசு நிதியிலிருந்து மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். எனவே, மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் மனுக்கள் வழங்க வேண்டும்.
60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்" என தெரிவித்தார்."உங்களுடன் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது.
அதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, வீடு இல்லாதவர்கள் இம்முகாமில் மனுக்கள் வழங்கி இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் கட்டித் தருவதற்கான ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம்." என அமைச்சர் பெரியசாமி கூறினார்.
மேலும், சுகாதாரத்துறையின் சார்பில் கலைஞர் காப்பீட்டு திட்டம் இருந்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, உடல்நிலை சரியில்லை என்றால் சிகிச்சை மேற்கொள்ள ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும், உயர் சிகிச்சை மேற்கொள்ள தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றும் அமைச்சர் பெரியசாமி கூறினார்.
Tags: தமிழக செய்திகள்