கரூர் விஜய் கூட்ட நெரிசல் சிக்கி 39 பேர் மரணம் - நடந்தது என்ன
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார்.
முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,
2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார்.
அந்த வரிசையில் 3-ம் கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார்.
இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து நாமக்கல் சென்றார். அங்கு மதியம் 2.30 மணிக்கு பிரசார இடத்தை சென்று அடைந்தார்.அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.
இதில் பெண்கள், குழந்தைகளும் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் நேற்று இரவு வரை விஜய் பிரசாரம் செய்ய வந்த இடத்தின் அருகிலேயே காத்திருந்தனர்.
ஆனால் விஜய்யின் பிரசார வாகனம் நேற்று மாலை சுமார் 5.40 மணியளவிலேயே கரூரை அடைந்தது. பின்னர்
வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் திரண்டிருந்ததால், விஜய்யின் வாகனம் ஊர்ந்தவாறு பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது.
கட்டுக்கடங்காத கூட்டத்தால், அந்த வாகனம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது.
இதையடுத்து அவர் இரவு 7 மணியளவிலேயே கரூரில் பிரசாரம் நடைபெற்ற இடத்தை வந்தடைந்தார்.
அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானவர்கள் வந்ததாலும், ஏற்கனவே பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்ததாலும் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதற்கு மத்தியில் விஜய் அந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அந்த பகுதியின் அருகே உள்ள கடையின் முன்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட், தென்னங்கீற்றுகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு நின்று கொண்டிருந்த சிலர் காயமடைந்தனர்.
அதேநேரத்தில் கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர்.
மயக்கம் ஏற்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனித்தனியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதையடுத்து கூட்டம் நடந்த இடம் அருகே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
அங்கு ஏராளமானவர்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைந்து போக செய்தனர்.
இது குறித்து FIR பதியப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகளாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை நீலங்கரையில் உள்ள விஜய் வீட்டு வாசலில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது துணை ராணுவப் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. 5 துணை ராணுவ வீரர்கள் தற்போது விஜய் வீட்டிற்கு வந்துள்ளனர்.
'விஜய் கைது செய்யப்படுவாரா?' என்ற கேள்விக்கு, 'அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க தயாராக இல்லை. அறிக்கையின் படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்