சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி மறுப்பு முழு விவரம்
திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால் அது மற்ற மதத்தினரை மீண்டும் தூண்டச் செய்து, பொதுஅமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அமைதி, மற்றும் மத நல்லிணக்கம் பாதிக்கும் வகையில் எவரையும் செயல்பட அனுமதிக்க கூடாது. இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது
பாரத் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணை
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பின் வட சென்னை மாவட்ட துணை தலைவர் எஸ். யுவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை அந்த மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை வரும் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க, காவல்துறை உத்தரவிட வேண்டும் என எஸ். யுவராஜ் கோரிக்கை விடுத்திருந்தார்
இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரியிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது.
கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த போராட்டக்காரர்கள், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது.
திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டதால் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை.மத ரீதியிலான பதட்டங்களை தணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.
மத நம்பிக்கைகளும், உணர்வுகளும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.
Tags: தமிழக செய்திகள்
