Breaking News

வெளிநாட்டில் இருந்து திரும்பும்பொழுது உடலில் அணிந்து வரும் நகைகளுக்கு சுங்க வரி உண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

வெளிநாட்டில் இருந்து திரும்பும்பொழுது உடலில் அணிந்து வரும் நகைகளுக்கு சுங்க வரி உண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பயணிகள் அணிந்து வரும் நகைகளை சுங்க வரி விதிக்கும் உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை

இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா 2023ல் சென்னையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பிரான்சில் வசித்து வந்த ஜெயகாந்த், மனைவிக்கு விசா பெறும் வரை அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். 

விசா பெற்றதை அடுத்து சென்னை திரும்பிய தன்ஷிகாவை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். தன்ஷிகா அணிந்த வளையல் தாலி சங்கிலி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி அவற்றை பறிமுதல் செய்தனர் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நமது மரபுப்படி அதிக எடையில் தாலி சங்கிலி அணிவது வழக்கம். இந்த மரபுகளுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும். 

கணவருடன் இன்னும் மண வாழ்க்கையை துவங்காத பெண்ணின் தாலி சங்கிலியை அகற்றிய செயல் நியாயமற்றது உடலில் அணிந்திருக்கும் நகைகளை உடமைகளாக கருதி சுங்கவரி விதிக்க முடியாது எனக் கூறி நகைகளை திரும்ப ஒப்படைக்குமாறு சுங்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். 

மேல் முறையீடு:-

இந்த உத்தரவை எதிர்த்து சுங்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சி.சரவணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. 

அப்போது, சுங்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள் உடைமைகளாக கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும்.உடலில் அணிந்துள்ள நகைகளை உடைமைகளாக கருத முடியாது என்ற உத்தரவை ஏற்றுக் கொண்டால், அது இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். 

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உடலில் அணிந்து வரும் நகைகளை சுங்க வரி விதிக்கும் வகையில் உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு நிபந்தனையுடன் தடை விதிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback