ஜாக்டோ - ஜியோ எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
ஜாக்டோ - ஜியோ எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜியோ ஜாக்டோ திருச்சியில் 04.02.2025 நடைபெற்ற தங்களது மாநில அளவிலான கூட்டத்தில் அனைத்து தாலூகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 25.02.2025 அன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் இவ்வாறு ஸ்டிரைக் நடத்துவது சட்ட விரோதம் என்று தடை செய்து உள்ள நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் சட்ட விரோதமானது எனவே ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்
இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு இந்த வழக்கில் அரசு தலைப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்
