மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு முழு பட்டியல் இதோ!
மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்க தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1.திராவிட முன்னேற்றக் கழகம்
2.இந்திய தேசிய காங்கிரஸ்
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
7.விடுதலை சிறுத்தைகள் கட்சி
8.மனிதநேய மக்கள் கட்சி
9.அகில இந்திய பார்வர்டு பிளாக்
10.தமிழக வாழ்வுரிமை கட்சி
11.மக்கள் நீதி மையம்
12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
13.ஆதி தமிழர் பேரவை
14.முக்குலத்தோர் புலிப்படை
15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
16.மக்கள் விடுதலை கட்சி
17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
18.பாட்டாளி மக்கள் கட்சி
19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
22.பாரதிய ஜனதா கட்சி
23.தமிழக வெற்றிக் கழகம்
24.நாம் தமிழர் கட்சி
25.புதிய தமிழகம்
26.புரட்சி பாரதம் கட்சி
27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
28.புதிய நீதிக் கட்சி
29.இந்திய ஜனநாயகக் கட்சி
30.மனிதநேய ஜனநாயகக் கட்சி
31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
33.பெருந்தலைவர் மக்கள் கட்சி
34.அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
35.பசும்பொன் தேசிய கழகம்
36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
38.கலப்பை மக்கள் இயக்கம்
39.பகுஜன் சமாஜ் கட்சி
40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
41.ஆம் ஆத்மி கட்சி
42.சமதா கட்சி
43.தமிழ்ப்புலிகள் கட்சி
44.கொங்கு இளைஞர் பேரவை
45.இந்திய குடியரசு கட்சி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்க தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
இந்தியாவின் கூட்டாட்சி முறையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், தமிழ் மக்களின் நலன் காப்பதற்கும் தேவையான பல்வேறு முயற்சிகளை நாம் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறோம். இருப்பினும், நிதிப் பகிர்விலும், அதிகாரப் பகிர்விலும், நம் உரிமைகளைக் காப்பதற்குத் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலையிலே நாம் உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் 2025-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ள சூழலில், நம் மாநிலம் சந்திக்கக்கூடிய இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு, தங்கள் கட்சி / இயக்கத்தின் ஆதரவைக் கோருவதற்காக இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகிறேன்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு வகை செய்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அழுத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அரசியல்சட்டத் திருத்தங்களால் மட்டுமே, இத்தகைய மறுசீரமைப்பு 2026-ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு வரையிலும், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை, மாநிலங்கள் முனைப்போடு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்த இலக்கை அடைவதில் அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளும் ஒரே அளவில் இல்லை.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், மக்கள்தொகை வளர்ச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டதால்தான். இந்த வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய முன்முயற்சிகள் தான், நாட்டின் மொத்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாடு வளர்ச்சி அடைவதற்கான முக்கியக் காரணமாகவும் இருந்து வருகின்றன. எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பாங்காற்றி வரும் நமது மாநிலத்தை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டிக்க நினைப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். இரண்டாவது முறையின்படி, மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசிரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து. 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது.
தற்போதைய மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு, ஒன்றிய அரசு சார்ந்த திட்டங்களில் நிதி குறைக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படாமல் தடுப்பது. ஒன்றிய அரசு அதிகாரத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது. நிதிப்பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம் என அனைத்து வகைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளும், கயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டாய், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நகக்கப்படும்.
மேற்கூறிய பிரச்சினைகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கொள்கை முடிவுகளிலும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் நமது உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்துள்ளன. “நீட்” நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக மாநில அரசுகளின் உயர்கல்வித் துறையின் உரிமைகளை அபகரிப்பது, நமது தனித்துவமான பண்பாடு மற்றும் மொழிப் பாதுகாப்புக் கொள்கைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளில், தேசிய அளவிலான கொள்கைகளை நமது மாநிலத்தின் மீது திணிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், இப்பிரச்சினைகளுக்கு எதிராகக் கிளர்ந்து, நமது தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆற்றலும், அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
எனவே, இந்தக் கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு முறையானது, நமது மாநிலத்தைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது இந்த முயற்சி நமது கூட்டாட்சிக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைப்பதற்கு முன்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நமக்குக் குறைந்த அளவு கால அவகாசமே
இருப்பதால், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது. இந்தக் கூட்டு முயற்சிக்கு உங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். நாம் அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசித்து, நமது மாநிலத்தின் நலன் காப்பதற்கான ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், தகுந்த உத்திகளைத் தீட்டிச் செயல்படுத்திட தங்களுக்கு இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறேன்.
இது தொடர்பாக, மார்ச் 5 அன்று, காலை 10 மணியளவில் தலைமைச் செயலகம். நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில், நாம் அனைவரும் கலந்தாலோசிக்கலாம் என நான் கருதுகிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Tags: அரசியல் செய்திகள்



