பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி கைது..! முழு விவரம்
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி கைது..! முழு விவரம்
சென்னையில் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு அருகில், சுமார் 100 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு அந்த பகுதியிலுள்ள சில அமைப்புகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர்.
மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிகம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றபோது ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை சிலர் கற்கள் வீசி சேதப்படுத்தினர். மேலும் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதன்பின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர்.
இந்த நிலையில், கொடிக்கம்பத்தை அகற்றியபோது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட கரு.நாகராஜன் உள்பட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கானாத்தூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கானாத்தூர் தனிப்படை போலீசார் இன்று மாலை அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ளார்கள்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்