மத்திய அரசின் பெண்கள் ,பெண்குழந்தைகள் பெயரில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் முழு விவரம் mahila samman scheme in tamil
மத்திய அரசு சார்பில் அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தற்போது, சிறுமியர் மற்றும் பெண்களுக்கு என, பிரத்யேகமாக, மத்திய அரசு மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.அந்த திட்டத்தை பற்றி முழுவதும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் என்றால் என்ன:-
மத்திய அரசின் 2023 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டத்தை அறிவித்தார்.
அதில் பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெயரில் இரண்டு ஆண்டுகள் டெபாசிட் செய்து அதற்க்கு அதிகபட்சமாக 7.5% வட்டி விகிதத்தை பெறலாம் என அறிவித்தார்
மத்திய அரசு கொண்டு வந்த இந்தத் திட்டத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும்.
பெண்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் சேமிக்கும் தொகையை வட்டியோடு திருப்பி அளிக்கும் பெண்களுக்கான மிகச் சிறந்த திட்டம் இதுவாகும்
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள், சிறுமியர், குழந்தைகள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்
டெபாசிட் எவ்வளவு:-
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் என்பது பெண்கள் அல்லது பெண்குழந்தைகள் பெயரில் குறைந்த பட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கை துவக்கலாம்.
முதிர்வு காலம் இரண்டு ஆண்டுகளாகும்.
குறைந்தபட்சம் மூன்று மாத இடைவெளியுடன், அதிகபட்ச தொகைக்கு 2 லட்சத்திற்கு, எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் துவக்கலாம்.
இத்திட்டம் 2025 மார்ச் 31 வரை இருக்கும்
டெபாசிட் ஆரம்பித்து ஒரு ஆண்டுக்கு பிறகு தேவைப்பட்டால் வைப்புத்தொகையில் இருந்து 40 சதவீதம் பணம் திரும்ப பெறலாம்.
கணக்கு துவங்கி ஆறு மாதங்களுக்குப்பின் தேவைப்பட்டால் கணக்கை முன்கூட்டியே 5.5 சதவீத வட்டியுடன் முடித்துக்கொள்ளலாம்.
டெபாசிட் கணக்கை தொடங்கியவர் இரண்டு ஆண்டுகளுக்குள் மரணமடைந்து விட்டால் முழுத் தொகையும் வழங்கப்படும்.
டெபாசிட் கணக்கை தொடங்கியவர் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவிக்கு இந்த டெபாசிட் பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம்.
பிள்ளைகளுக்காக முதலீடு செய்து வரும் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டாலும் இடையில் முழுப் பணமும் தரப்பட்டுவிடும்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி