Breaking News

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு

அட்மின் மீடியா
0

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்:-

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து, அந்தப் பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டு வர விரும்புகிறேன்.

ஆதி திராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். 

இந்து மதத்தில் இருந்து வேறு மதம் மாறியவர்கள் பட்டியலின சாதிகளில் இணைய முடியாது. ஆனால், சீக்கியம் மற்றும் பவுத்த மதம் மாறியவர்களை பட்டியலின சாதிப்பட்டியலில் சேர்த்து முறையே 1956, 1990 ஆண்டுகளில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. 

வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு. 

அந்த வகையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூக நீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு.

இதே போன்ற திருத்தம்தான் கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கின்றனர். வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு.

ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும் மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும் தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

தீர்மானம்:-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது

சமூக நீதியானது சம நீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கேட்டு அமர்கின்றேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback