Breaking News

வாகன நம்பர் பிளேட்டில் தலைவர்கள், நடிகர்கள் படம் இடம்பெறக் கூடாது!! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அட்மின் மீடியா
0

வாகன நம்பர் பிளேட்டில் தலைவர்கள், நடிகர்கள் படம் இடம்பெறக் கூடாது!! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், 

மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அரசின் வழிகாட்டுதல்படி நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 50,51ஐ மீறும் வகையில்எதிராக வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்களின் பெயர், படங்களை நம்பர் பிளேட்டில் ஒட்டிக் கொள்கிறார்கள். 

மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதிவு எண்களை வித்தியாசமான வடிவங்களில் எழுதி கொள்கின்றனர். இது சட்டவிரோதமானது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு  நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி, இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனுதாரர் அளித்த மனுவில், விதிகளை மீறி எழுதப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றவில்லை என்றால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின்பேரில் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் தெரிவித்துள்ளார் என்றார்.

இதற்கு நீதிபதிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மனுதாரரின் நடவடிக்கையை ஏற்க இயலாது. இதற்காக அவருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம். இதுபோன்ற மனுவை இனி அளிக்கக்கூடாது என எச்சரித்தனர். இதையடுத்து அந்த வரியை நீக்கிவிடலாம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் அரசு விதிமுறைகளின்படி அந்த வாகனத்தின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும், வேறு எந்த வகையிலும் எழுத்தோ, தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெறக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் தமிழ்நாட்டில் உள்ள மண்டல போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback